ஊத்துக்குளி:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஊத்துக்குளி பேரூராட்சியில் 9 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. முதல் முறையாக தி.மு.க.வைச் சேர்ந்த 1-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பழனியம்மாள் ராசுக்குட்டி போட்டியின்றி ஒருமனதாக தலைவராக பதவியேற்றுள்ளார்.
இதையடுத்து அவர் கூறியதாவது:
ஊத்துக்குளி பேரூராட்சி 11 மற்றும் 12-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக கழிவுநீர், மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு வடிகால் வசதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் ஊத்துக்குளியில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதுடன் கழிவுநீர் தேங்கி வருகிறது. இது குறித்து துறை ரீதியான அதிகாரிகள் மற்றும் அமைச்சருடன் கலந்து பேசி உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு பகுதியில் கதர் கடை முதல் ஊஞ்சக்காடு வரை வேலம்பாளையம், பெரிய வேலம்பாளையம், நடுவேலம்பாளையம் பகுதி பொது மக்கள் பயனடையும் வகையில் தற்போதுள்ள குறுகிய தார்சாலை அகலப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும்.
மேலும் பொது மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் அனைத்து வார்டு பகுதிகளிலும் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கட்சிப் பாகுபாடின்றி ஊத்துக்குளி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டு பகுதிகளுக்கும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு பேரூராட்சி நிர்வாகத்துடன் பொதுமக்களும் தங்களது ஒத்துழைப்பை தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.