பல்லடம்:
திருப்பூர்,கோவை மாவட்டங்களில் விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 33 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் பல்லடம் ரகத்திற்கு 15 சதவீதம் ,சோமனூர் ரகத்திற்கு 19 சதவீதம் என கூலி உயர்வு தருவதாகவும் பிறகு சுமார் 4 மாதங்கள் கழித்து மீண்டும் கூலி உயர்வு வழங்கப்படுமென இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆனால் இதனை ஒப்பந்தம் செய்து கொண்டு கையெழுத்து இடுவதில் ஜவுளி உற்பத்தியாளர்கள் முரண்பட்டதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் கூலி உயர்வு பிரச்சனை தொடர்பாக நேற்று செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை சந்தித்து கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என விசைத்தறியாளர்கள் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், திடீரென பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ''
இதுகுறித்து திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க தலைவர் வேலுசாமி,செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூறியதாவது:-
கடந்த 7 வருடங்களாக நீடித்து வந்த விசைத்தறி கூலி உயர்வு பிரச்சினை கடந்த மாதத்தில் அமைச்சர்கள் பேசி உடன்பாடானது.
ஆனாலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு கொடுக்க மறுக்கின்றனர். கூலி உயர்வு தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடந்து அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் பல்லடம் ரகத்திற்கு 15 சதவீதம் சோமனூர் ரகத்திற்கு 19 சதவீதம் என கூலி உயர்வு தருவதாகவும் பிறகு சுமார் 4 மாதங்கள் கழித்து மீண்டும் கூலி உயர்வு வழங்கப்படுமென இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஆனால் இதனை ஒப்பந்தம் செய்து கொண்டு கையெழுத்து இடுவதில் ஜவுளி உற்பத்தியாளர்கள் முரண்பட்டதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதையடுத்து அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடக்கும் என அறிவிக்கப்பட்டதால், இந்த முறை உடன்பாடு ஏற்படும் என்ற நம்பினோம். நீண்ட நேரம் காத்திருந்தும் அமைச்சர் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றோம்.
கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும். விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளோம் .
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.