பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் காத்திருந்த பொதுமக்கள். 
உள்ளூர் செய்திகள்

சர்வர் பிரச்சினையால் பத்திரப்பதிவு தாமதம் - பொதுமக்கள் அவதி

சுப முகூர்த்த நாட்களில் சுமார் 150 டோக்கன்கள் வரை வழங்கப்பட்டு பத்திரப்பதிவு நடைபெறும் .

மாலை மலர்

பல்லடம்:

பல்லடம் மங்கலம் ரோட்டில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பத்திரம் பதிவு செய்வதற்காக பல்லடம், பொங்கலூர் மற்றும் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் பத்திர பதிவு தொடர்பான பல்வேறு பணிகளுக்கு தினமும் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். 

திருப்பூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பத்திரங்கள் பதிவு செய்யப்படும் அலுவலகங்களில் இதுவும் ஓன்று. இங்கு தினமும்100 டோக்கன்கள் வழங்கப்பட்டு பத்திரபதிவு நடைபெறுகிறது.

சுபமுகூர்த்த நாட்களில் சுமார் 150 டோக்கன்கள் வரை வழங்கப்பட்டு பத்திரப்பதிவு நடைபெறும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இணையத்தள சர்வரில் அடிக்கடி பிரச்சனை ஏற்படுவதால் பத்திர பதிவு செய்வதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டு பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

சிலசமயங்களில் நள்ளிரவு வரை பத்திரப்பதிவு நடைபெறுகிறது. இதனால் பொதுமக்களுக்கு காலவிரயம், வருவாய் இழப்பு, தேவையின்றி செலவுகள் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. மேலும் முகூர்த்த நாளில் நல்ல நேரத்தில் பத்திரம் பதிவு செய்ய திட்டமிட்டவர்கள் அந்த நேரத்தில் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடையும் சம்பவங்களும் நடைபெறுகிறது .

எனவே இணையத்தள சர்வரை மேம்படுத்தி பத்திரப்பதிவு விரைவாக நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.