அவிநாசி:
அவிநாசி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்வரி, துணைத் தலைவர் பிரசாத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:
கார்த்திகேயன் (சுயேச்சை): அரசுப் பள்ளி, கல்லூரி அமைந்துள்ள அவிநாசி புதிய பேருந்து நிலையம் முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வரை பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும். அவிநாசி ஒன்றியத்தில் மனை வரன்முறைப்படுத்தலுக்கு பயனாளி ஒருவர் மனு கொடுத்து பல மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
அவிநாசிலிங்கம்பாளையம் அரசுப் பள்ளியில் விழும் நிலையில் உள்ள மரத்தை அகற்ற கோரி 5 மாதங்களாக வலியுறுத்தி வருகிறோம். வருவாய்த் துறையினர், ஒன்றிய நிர்வாகத்தினர் யாரும் கண்டுகொள்ளவில்லை.
சேதுமாதவன் (திமுக): பழங்கரை ஊராட்சியில் இடிந்த நிலையில் உள்ள நூலக கட்டடத்தை சீரமைக்க வேண்டும். மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர்க் குழாய் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும்.
உமாபதி சரவணன் (திமுக): தத்தனூர் ஊராட்சி புதுச்சந்தை அரசுத் தொடக்கப்பள்ளி அருகே பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலைத்தொட்டியை சீரமைக்க வேண்டும்.
நந்தினி (சுயேச்சை): பாப்பாங்குளம் ஊராட்சியில் பழைய தொகுப்பு வீடுகளுக்கு பராமரிப்பு நிதி ஒதுக்க வேண்டும். பவர்ஹவுஸ் பகுதியில் பல லட்சம் மதிப்பில் டெண்டர் விடப்பட்டு, பல மாதங்களாக நிறுத்தி வைத்துள்ள பல்நோக்கு மைய கட்டுமானப் பணியை உடனடியாக தொடங்கி, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
அய்யாவு (அதிமுக): துலுக்கமுத்தூர் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் அரசுப்பணியில் இல்லாதவர்கள் ஆதிக்கம் செலுத்தி, பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துலுக்கமுத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். பிரசவ வார்டை விரிவுபடுத்த வேண்டும்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்தி பேசியதாவது:
பல கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நம்பியாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த 3 ஆழ்துளை கிணறுகளும் வற்றிவிட்டதால், சிசிச்சை பெறும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஒவ்வொரு ஊராட்சிகளில் போதுமான நிதி ஒதுக்கீடு இருந்தும் கொசு ஒழிப்பதற்கான கை இயந்திரம், பெரிய இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் ஏதும் இல்லாததால், டெங்கு ஒழிப்பு முடக்கியுள்ளது என்றார்.
இதையடுத்து பேசிய ஒன்றிய நிர்வாகத்தினர் உறுப்பினர்களின் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இவ்வாறு கூட்டம் நடைபெற்றது.