கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

கொரோனா சிகிச்சை மையம் - உடுமலையில் கலெக்டர் ஆய்வு

தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாலை மலர்

உடுமலை:

கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்தால் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் தற்காலிக மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்கள் அமைப்பது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உடுமலையில் ஆய்வு செய்தார்.

உடுமலை நகராட்சி திருமண மண்டபம், எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கை அமைத்தல், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் இருப்பு நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் தொற்று பரிசோதனைக்கு ஏற்கெனவே செயல்பட்ட தனி வளாகத்தையும் பார்வையிட்டார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது இடங்களில், முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத கடைகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதமும், அவற்றை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தவும், முதல் தவணை செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி வழங்கவும், இரண்டாம் தவணை காலக்கெடு முடிந்தும் செலுத்தாதவர்களுக்கு உடனடியாக செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.