திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை களைய வாரம் தோறும் திங்கட்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வந்தது.
தற்போது கொரோனா பெருந்தொற்று மீண்டும் தமிழகத்தில் அதிகரித்து வருவதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக வருவதை தவிர்க்கும் பொருட்டு இன்று முதல் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் ஒத்திவைக்கப்பட்டது.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ஒத்திவைக்க வைக்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்தார். இந்தநிலையில் இன்று பொதுமக்கள் பலர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது தெரியாமல் மனுக்கள் கொடுக்க வந்தனர்.
அவர்கள் மனுக்களை கொடுப்பதற்கு வசதியாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் புகார் பெட்டி அமைக்கப்பட்டு இருந்தது. அதில் பொதுமக்கள் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.
மேலும் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரவேண்டாமெனவும், தங்களது குறைகளை 97000-41114 என்ற செல்போன் எண்ணிற்கு இன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் பலர் செல்போன் எண்ணை தொடர்புகொண்டு அதிகாரிகளிடம் தங்களது புகார்களை தெரிவித்தனர்.