திருப்பூர்:
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் தொற்றின் வேகம் குறைந்தது. இந்நிலையில் தற்போது 3-வது அலை பரவ தொடங்கிய நிலையில், தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்களில் வழிபாட்டு தலங்களை மூட உத்தரவிட்டுள்ளது.
இதுபோல் மற்ற நாட்களில் இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று வெள்ளிக்கிழமை திருப்பூர் பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.
திருப்பூர் ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில்கள் மூடப்பட்டு கிடந்தன. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலின் வெளிப்புறத்தில் நின்று வழிபாடு செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதேப்போல் மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, தாராபுரம், அவினாசி, பல்லடம், காங்கேயம், வெள்ளகோவில் உள்பட பல்வேறு இடங்களில் கோவில்கள் அடைக்கப்பட்டன. பக்தர்கள் அனைவரும் கோவில் முன்பு நின்று தரிசனம் செய்தனர். மசூதிகள், ஆலயங்களிலும் தொழுகை, பிரார்த்தனை நடத்த தடை விதிக்கப்பட்டது.