வெள்ளகோவில்:
காங்கேயம் வட்டம் முத்தூர் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி. இவரது மனைவி மாசிலாமணி (வயது30). இவர் முத்தூர் கொடுமுடி ரோட்டில் உள்ள சின்னமுத்தூர் பிரிவு கடைத்தெருவில் பால்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தனது வீட்டில் இருந்து புறப்பட்டு பால் கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது முத்தூர்-ஈரோடு ரோட்டில் தண்ணீர்பந்தல் அருகே வந்து கொண்டிருந்தார். ரோட்டில் மக்கள் நடமாட்டமில்லை. இதனை நோட்டமிட்டு காத்திருந்த மர்ம நபர் மாசிலாமணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலியை அறுத்து சென்றார். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மாசிலாமணி காயமடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.