அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி மகள் தாரணி ( வயது 22). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 5-ந்தேதி வேலாயுதம்பாளையம் பைபாஸ் சாலையில் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்கள் தாரணியின் கையிலிருந்த செல்போனை பறித்து கொண்டு வேகமாக சென்றனர்.
அப்போது அவ்வழியே எதிரே வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்த அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்ததில் பிடிபட்டவர்கள் நம்பியாம்பாளையத்தை சேர்ந்த சிவராஜ் மகன் சுரேஷ்(17) , சேவூரை சேர்ந்த சங்கர் மகன் பிரவின்குமார் (18) என்பதும் இவர்கள் இருவரும் சேவூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவர் அவினாசியை அடுத்து குடும்பபாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் லோகநாதன் (18) என்பதும் தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த செல்போன் மற்றும் மோட்டர் ர்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.