கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

செல்போன் டவர்களால் மட்டும் பறவை இனங்கள் அழியவில்லை - இயற்கை கழக தலைவர் தகவல்

பறவையினங்கள் இல்லாவிட்டால் மனித இனம் வாழ முடியாது என்பதுதான் நிதர்சனம்.

மாலை மலர்

திருப்பூர்;

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 மாணவர்களின் தத்தெடுப்பு கிராமமான அவிநாசி, கருமாபாளையம் கிராமத்தில் தங்கள் களப்பணியின் ஒரு பகுதியாக சுற்றித்திரியும் பறவைகள் கணக்கிடுவதில் மாணவர்கள் நேரத்தை செலவழித்தனர். 

அவர்கள் கண்ணில் பட்டை கழுத்துப்புறா, சிலம்பன், கருஞ்சிட்டு, தேன்சிட்டு, கல்பொறுக்கி பறவை, கல்கவுதாரி, மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, கவுதாரி என 32 வகையான பறவைகள் கண்ணில் தென்பட்டது. மேலும் வெண்தொண்டை சில்லை, நீளவால் பஞ்சுருட்டான், கொண்டாலத்தி என சொல்லிக்கொண்டே போகலாம். 

இயற்கையின் நண்பர்களான இந்த குருவியினங்கள் புழு, பூச்சிகளை உண்டு வாழ்கின்றன. இயற்கையை பேணிகாப்பதில் பெரும் பங்காற்றுகின்றன.

அதுவும் ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் பரவி கிடக்கும் விவசாய நிலங்கள், மரம், செடி, கொடி, குளம், குட்டைகளில் தென்பட்டது வியப்புக்குரிய விஷயம் மட்டுமல்ல. கொண்டாடி மகிழ வேண்டிய விஷயமும் கூட.

இவையெல்லாம் வெளி மாநிலங்களில் இருந்தோ, வெளிநாடுகளில் இருந்தோ வந்ததல்ல. இதே மண்ணில் வாழும் ஊர்ப்புறத்து பறவைகள் தான் என்கிறார் திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன்.

அவர் மேலும் கூறியதாவது:

பறவையினங்கள் இல்லாவிட்டால் மனித இனம் வாழ முடியாது என்பதுதான் நிதர்சனம். மரங்களிலும் ஓட்டு வீடுகளின் முற்றங்களில் மட்டும் தான் பறவையினங்கள் கூடு கட்டும் என்பதல்ல. 

கல்பொறுக்கி பறவை, கல்கவுதாரி போன்ற பறவையினங்கள் புல்வெளி நிறைந்த தரையிலும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். நகரமயமாக்கல், வனங்கள் அழிப்பு, மரங்களின் அழிவு போன்ற பல காரணங்களால் பறவைகளுடனான உறவு மெல்ல, மெல்ல தொலைந்து கொண்டிருக்கிறது. 

புல்வெளிகளின் அழிவால் அவற்றின் இனப்பெருக்கமும் குறைந்துவிட்டது. கானமயில் எனப்படும் பறவையினம் இல்லாமலே போய்விட்டது. செல்போன் டவர்களால்தான் பறவை இனங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்பதல்ல விஷயம். 

ஓட்டு வீடுகள் அனைத்தும் கான்கிரீட் கட்டடமாகிவிட்டன. பறவையினங்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டிருக்கிறது. இவைதான் பறவையினங்களின் எண்ணிக்கை குறைய முக்கிய காரணம். ரசாயன உரம் கலந்த மண்ணில் உள்ள புழு, பூச்சிகளை உண்ணும் பறவையினங்கள் இறந்து போவதும் ஒரு காரணம். 

விவசாய நிலங்களில் பூச்சி தாக்குதலில் இருந்து 85 சதவீதம் பயிர்கள் பாதுகாப்புடன் இருக்க பறவையினங்கள் உதவுகின்றன. எனவே பறவையினங்கள் நிறைந்துள்ள இடத்தில் அவற்றின் வாழ்விடத்தை தக்க வைப்பது மரங்களை வளர்ப்பது என இயற்கை சார்ந்த விஷயங்களுடன் இணைந்திருப்பதால் மட்டுமே பறவையினங்களும் நம்முடன் பிணைந்திருக்கும்.

நகரமாயக்கல், வனங்கள் அழிப்பு, மரங்களின் அழிவு போன்ற பல காரணங்களால், பறவைகளுடனான உறவு மெல்ல, மெல்ல தொலைந்து கொண்டிருக்கிறது. புல்வெளிகளின் அழிவால் அவற்றின் இனப்பெருக்கமும் குறைந்துவிட்டது. கானமயில் எனப்படும் பறவையினம் இல்லாமலே போய்விட்டது என்றார்.