திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி நான்கு மண்டலங்களில் 8 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெற்று வந்தனர்.
கடந்த 28-ந் தேதி முதல் நான்கு மண்டலங்களிலும் வேட்பு மனு படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டன. நேற்று வரை ஏறத்தாழ 900 பேர் மனு படிவம் பெற்று சென்றனர். மனுத்தாக்கல் தொடங்கிய முதல் இரு நாட்களும் ஒருவர் கூட மனுத்தாக்கல் செய்யவில்லை.
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணியில் வேட்பாளர் பட்டியல் வெளியானதையடுத்து மனுத்தாக்கல் சூடு பிடித்தது. பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தனித்துப் போட்டி என்ற நிலையில் அக்கட்சிகள் சார்பில் பல வார்டுகளில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யத் தொடங்கினர். அவ்வகையில் நேற்று ஒரே நாளில் 222 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இன்று மாலை 5 மணியுடன் மனுத்தாக்கல் நிறைவடைகிறது.
இதனால் வேட்பு மனு தாக்கல் செய்யாத தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் இன்று மாவட்டத்தில் உள்ள வேட்புமனு தாக்கல் நடைபெறும் இடங்களில் காலையிலேயே குவிந்தனர். பலர் போட்டி போட்டுக்கொண்டு மனு தாக்கல் செய்ய முயன்றனர்.
திருப்பூர் மாநகராட்சியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறி நீடித்த நிலையில் நேற்றிரவு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனால் அவர்களும் மனு தாக்கல் செய்ய குவிந்தனர்.
எனவே அனைத்து தேர்தல் அலுவலகங்களிலும் வேட்பாளர்களை சமாளிக்கும் வகையில் டோக்கன் வழங்குதல், கூடுதல் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 3பேர் மட்டுமே செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
இதனால் வேட்பாளருடன் மனு தாக்கல் செய்ய வந்தவர்களில் 2பேர் தவிர மற்ற அனைவரும் அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் நடைபெறும் இடங்களில் அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்பகுதியே களை கட்டி காணப்பட்டது.
நாளை 5-ந்தேதி மனுக்கள் பரிசீலனைக்கு எடுக்கப்படுகிறது. உரிய வகையில் பூர்த்தி செய்யாத மற்றும் ஆவணங்கள் இணைக்கப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். வரும் 7-ந் தேதி, மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள். அதன் பின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.