கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

திருமூர்த்தி அணையில் படகு சவாரி- சுய உதவிக்குழு பெண்கள் எதிர்பார்ப்பு

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையில் தளி பேரூராட்சி சார்பில் படகுத்துறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மகளிர் சுய உதவிக்குழு வாயிலாக என்ஜின் மற்றும் பெடலிங் என 5-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்பட்டு வந்தன. 

அவ்வகையில் விடுமுறை மற்றும் சீசன் காலங்களில் தினமும்  200க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்தனர்.

இவ்வாறு இயக்கப்பட்ட படகுகளின் கட்டண வருவாயில், 75 சதவீதம் மகளிர் சுய உதவி குழுவினருக்கும், 25 சதவீதம் தளி பேரூராட்சி நிர்வாகத்திற்கும் ஒதுக்கப்பட்டது. '

ஆனால் குளறுபடி, இழப்பு, படகுகள் பராமரிப்பு செலவினம் உள்ளிட்ட காரணங்களால் பேரூராட்சி வருமானத்தை விட செலவு அதிகரித்ததால் படகு சவாரி முடங்கியது. தற்போது படகுத்துறை பாழடைந்தும், படகுகள் அனைத்தும், பராமரிப்பு இல்லாமல் உடைந்தும் வீணாகியுள்ளது. 

அதேநேரம் கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா மையங்களும் செயல்படாததால் படகு சவாரியை துவக்க பேரூராட்சி நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்குப்பின் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்ட பின் படகு சவாரி மீண்டும் உயிர்ப்பிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பழங்குடியின பெண்கள் இடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அவ்வகையில் திருமூர்த்தி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள், படகு சவாரி இல்லாமல், ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர். 

தேர்தலில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டதும் படகு சவாரியை தொய்வின்றி நடத்த முன்வர வேண்டும். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் படகுத்துறையை சீரமைக்கவும், புதிதாக படகுகள் வாங்கி இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதனால் சுயஉதவிக்குழுவினருக்கும் கணிசமான வருவாய் கிடைக்கும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.