கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

உடுமலை நகருக்குள் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் பகுதி வெகுவாக குறைந்துள்ளது.

உடுமலை:

கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை நகருக்கு பைபாஸ் ரோடு, திட்ட சாலைகள் இல்லாததால் கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும், நகருக்குள் வந்து செல்கின்றன. இந்நிலையில் நகர எல்லையான கொழுமம் ரோடு சந்திப்பில் இருந்து ராஜவாய்க்கால் பள்ளம் வரை விபத்துகளை குறைக்க தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.

ஆனால் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் பகுதி வெகுவாக குறைந்துள்ளது. இப்பிரச்சினையால் நெரிசல் அதிகரித்து சந்திப்பு பகுதிகளில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

உடுமலை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை அதிகரித்துள்ள நிலையில் விதிமுறைகளை கண்டுகொள்ளாமல் அதிவேகத்தில் பறக்கும் வாகனங்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. முன்பு நகர எல்லைக்குள் வாகனங்களின் வேகம், 30 கி.மீ., என வரையறை செய்யப்பட்டு அதற்கான தகவல் பலகைகளும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வைக்கப்பட்டன. 

இந்த பலகைகள் மாயமான நிலையில் அதிவேக வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை. நகர எல்லையில், வேக கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். வேகத்தை கண்டறியும் ‘ஸ்பீடு கன்’ போன்ற உபகரணங்களை போக்குவரத்து போலீசாருக்கு வழங்கி ஆய்வு நடத்துவது அவசியமாகும்.

வட்டார போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து போலீஸ், தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இணைந்து இப்பணிகளை உடனடியாக செய்து விபத்துகளை தவிர்க்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.