பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் - பொங்கலூர் அருகே உள்ள நாதேகவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஒரு வாலிபரும், கள்ளிப்பாளையம் அருகே உள்ள வலையபாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வலையபாளையத்திலிருந்து, நாதேகவுண்டம்பாளையத்திற்கு சம்பந்தப்பட்ட வாலிபரின் வீட்டுக்கு சிலர் சென்றுள்ளனர். அங்கு தங்கள் ஊரை சேர்ந்த பெண்ணுடன் பேசக்கூடாது என்று எச்சரித்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்,வீடு புகுந்து வாலிபரைத் தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரி நாதேகவுண்டம்பாளையத்தில் உள்ள கோவில் முன்பு பொதுமக்கள் ஒன்று திரண்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி உள்பட போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்வதாக உறுதியளித்தனர்.
இந்த நிலையில் வலையபாளையத்தை சேர்ந்த கிட்டுசாமி (வயது 50), அவரது மனைவி தனபாக்கியம் (48), துத்தாரிபாளையத்தை சேர்ந்த கலுங்குராஜ் (25), வலையபாளையத்தை சேர்ந்த கவுதம் (20) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.