திருப்பூர்:
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடம் குறித்த விவரங்களை ‘எமிஸ்’ வலைதளத்தில் பதிவேற்றும்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பாட வாரியாக பட்டியல் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் ஒவ்வொரு கல்வி மாவட்டம் வாரியாக காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவிநாசி, தாராபுரம், குடிமங்கலம், காங்கயம், மடத்துக்குளம், மூலனூர், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், ஊத்துக்குளி, உடுமலை, வெள்ளக்கோவில் கல்வி மாவட்டங்களில் 188 இடங்கள் காலியாக கண்டறியப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக புதுராமகிருஷ்ணா நகராட்சி துவக்கப்பள்ளி, பொங்கலூர் அருகே நாச்சிபாளையம் நடுநிலை பள்ளிகளில் தலா 6 இடங்களும், தேவாங்கபுரம் நடுநிலைப்பள்ளி, பாலமுருகன் நகர் நடுநிலைப்பள்ளி, செரங்காடு நடுநிலைப்பள்ளி, கோல்டன் நகர் நடுநிலைப்பள்ளி, இடுவம்பாளையம் துவக்கப்பள்ளி, கவிதாலட்சுமி நகர் துவக்கப்பள்ளி, சிறுபூலுவபட்டி நடுநிலைப்பள்ளி, ரங்கநாதபுரம் நடுநிலைப்பள்ளி, பாண்டியன் நகர் துவக்கப்பள்ளி, கரைப்புதூர் நடுநிலைப்பள்ளிகளில் தலா 3 இடங்கள் காலியாக உள்ளன.ஏனைய பள்ளிகளில் ஒரு ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், ‘’மாணவர் விகிதாசாரம் அடிப்படையில் ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளிகளில் இல்லை. இதனால் குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதிப்படைகிறது. கலந்தாய்வில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே ஊரடங்கால் குழந்தைகளிடம் கற்றல் குறைபாடு அதிகரித்துள்ளது. மீண்டும் பள்ளிகள் திறப்பதற்குள் பற்றாக்குறையாக சரிசெய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.