குப்பை கிடங்கு தீ பற்றி எரியும் காட்சி. 
உள்ளூர் செய்திகள்

பல்லடத்தில் குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

ஒரு ஏக்கர் அளவிலான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. சம்பவ இடம் வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப்பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

மாலை மலர்

பல்லடம்:

பல்லடம்- மாணிக்காபுரம் ரோட்டில் உள்ள பெரியார் நகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இறைச்சி கடைகள் உள்ளது. இதன் பின்புறம் சுமார் ஒரு ஏக்கர் அளவிலான இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம ஆசாமிகள் சிகரெட் புகைத்து விட்டு குப்பைகளின் மேல் வீசிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மளமளவென பற்றிய தீ கொளுந்து விட்டு எரிந்து அந்த பகுதியில் புகை மண்டலமாக மாறியது. இதுகுறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப்பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அக்கம் - பக்கம் உள்ள வீடுகள் தீ விபத்தில் இருந்து தப்பியது. குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தீவிபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடம் வந்து தீயை அணைத்த தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.