பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கோட்டப்பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரது மகன் அன்பரசு (வயது 45). சமூக ஆர்வலரான இவர் அந்த பகுதியில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்து புகார் தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் வெளியில் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். கோட்டப்பாளையம் அருகே வந்த போது அடையாளம் தெரியாத 3 பேர் இவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த அன்பரசுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இது குறித்து அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சமூக ஆர்வலரை மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.