உள்ளூர் செய்திகள்

சாலையில் சென்ற போது திடீரென தீப்பற்றி எரிந்த கார்

தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்

ஜோலார்பேட்டை:

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கலைமணி (வயது 36). இவரது மனைவி சத்தியா (32). இவர்களுக்கு லித்திக்ஷா (6) என்ற மகளும், நிவின் (3) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் கலைமணி கிருஷ்ணகிரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தனது காரில் நேற்று இரவு சென்றார். காரை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் முருகன் ஓட்டினார்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது காரின் முன்பக்கத்தில் இருந்து திடீரென புகை வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் காரை ஓரமாக நிறுத்தினார். காரில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறினர். கண்ணிமைக்கும் நேரத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தொரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் காரில் எரிந்த தீயை அணைத்தனர். முன்கூட்டியே சுதாரித்துக் கொண்டு காரில் இருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.