நெல்லை:
தை அமாவாசை நாளில் ஏராளமான மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் படித்துறையில் இருந்து தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள படித்துறைகள், நீர்நிலைகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் காலையிலேயே திரண்டு தர்ப்பணம் செய்வார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் ஏராளமானோர் வீடுகளில் வைத்து தர்ப்பணம் செய்தனர்.
ஆனால் இந்த ஆண்டு நாளை தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால் அந்தந்த பகுதிகளில் உள்ள தாசில்தார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கொரோனா பரவலை பொறுத்து தர்ப்பணம் செய்வதற்கு அனுமதி வழங்குவதா வேண்டாமா என முடிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து பாபநாசம் கோவில் முன்பு உள்ள சுவாமி மண்டபம் படித்துறை பகுதியில் தர்ப்பணம் கொடுக்க அனுமதி இல்லை எனவும், அதற்கு பதிலாக முக்கூடல் ஆறு மற்றும் பாபநாசம் கோவிலுக்கு தென்புறம் உள்ள அய்யா சுவாமி கோவில் முன்பும் தர்ப்பணம் கொடுக்கலாம் என்று அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் நெல்லை மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை, கொக்கிரகுளம், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் படித்துறைகளில் தர்ப்பணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.