மாரிசேகர் 
உள்ளூர் செய்திகள்

மர்மமாக இறந்த வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்

வி.கே.புரத்தில் மர்மமாக இறந்த வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை அடுத்த செட்டிமேடு இந்திரா காலனியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மகன் மாரிசேகர்(வயது 22).

இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு அங்குள்ள கோரையாறு குளம் பகுதிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்தபோது அவர் சாலையில் பலத்த காயத்துடன் கிடந்தார்.

உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் நேற்று அதிகாலை இறந்தார். இதுதொடர்பாக வி.கே.புரம் போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆனால் மாரிசேகரை தேர்தல் முன்விரோதத்தில் சிலர் கொலை செய்துவிட்டதாக கூறி அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த அவர்கள் கொலையாளிகளை கைது செய்தால் மட்டுமே மாரிசேகரின் உடலை பெற்றுக்கொள்வோம் என்று கூறி போராட்டம் நடத்தினர்.

மேலும் கலெக்டர் முகாம் அலுவலகத்தையும் முற்றுகையிட முயன்றனர்.  உடனே போலீசார் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக மாரிசேகரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

மாரிசேகரை 9 பேர் கும்பல் கொலை செய்து இருப்பதாக கூறி அவர்கள் வி.கே.புரம் போலீசில் புகார் அளித்தனர். பிரேத பரிசோதனை முடிவு இன்று தெரிந்துவிடும்.

அதன்பின்னரே அவரது உடலில் இருந்த காயங்கள் விபத்தினால் ஏற்பட்டதா? அல்லது யாரேனும் அடித்ததால் ஏற்பட்டதா? என்பது தெரியவரும்.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.