கூட்டத்தில் மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூவிடம் பொதுமக்கள் மனுக்கள் அளித்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

டவுன் கழிவுநீர் ஓடையை சீரமைக்க வேண்டும்-மேயரிடம் கோரிக்கை மனு

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணைமேயர் ராஜீ, மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 சங்கர்நகர் பேரூராட்சியின் முன்னாள் சேர்மனும் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான பேச்சி பாண்டியன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

 நெல்லை மாநகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட கரையிருப்பு பகுதியில் சப்பாணி மாடசாமி கோவில் உள்ளது.

இந்த கோவில் கொடை விழா வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. மெயின் ரோட்டில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் முட்செடிகள் ஆக்கிரமித்துள் ளன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் வாகனங்களில் செல்வதற்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது.

எனவே ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த முட்புதர்களை அப்புறப்படுத்தி தர வேண்டும். மேலும் கோவில் கொடை விழாவின் போது லாரிகள் மூலம் தண்ணீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

மாநகராட்சி 28-வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகர் அளித்த மனுவில், பாரதியார் தெரு, வையாபுரி தெரு, டவுன் அம்மா உணவகம் அருகில் இருபுறமும் உள்ள கழிவு நீர் ஓடையை சீரமைக்க வேண்டும்.

அங்கே அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் வெளியே வந்து தெருவில் சாக்கடையாக ஓடுகிறது. இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.