நெல்லை:
நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் தடை காரணமாக எளிமையாக நடைபெற்று வருகிறது.
கடந்த 9-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி தைப்பூச திருவிழா 12 நாட்கள் நடக்கிறது. 4-ம் நாளான கடந்த 12-ந் தேதி நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நடைபெற்றது.
10-ம் திருவிழாவான நேற்று சுவாமி-அம்பாள், தாமிரபரணி தேவி, வஸ்திரதேவர் ஆகியோருக்கு தைப்பூச தீர்த்தவாரி தாமிரபரணி ஆற்றில் நடக்காமல் கோவில் உள்பகுதியில் பொற்றாமரை குளத்தில் நடந்தது.
தொடர்ந்து சுவாமி அம்பாள் உள்ளிட்ட மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இன்று காலை சவுந்தரசபா மண்டபத்தில் திருநடனகாட்சி நடைபெற்றது.
நாளை (வியாழக் கிழமை) நெல்லையப்பர் கோவில் வெளிதெப்பத்தில் தெப்ப திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
நாளை தெப்பதிருவிழா நடைபெறுவதையொட்டி வெளிதெப்பத்தை சுத்தம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு உழவாரப்பணிகள் செய்து வருகிறார்கள். மேலும் தெப்பதிருவிழாவின் போது கொண்டு செல்லப்படும் தேரை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.