கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

மணிமுத்தாறு-பாளையில் வெப்பச்சலனம் காரணமாக திடீர் மழை

தென் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி மணிமுத்தாறு, பாளையில் திடீர் மழை பெய்தது.

மாலை மலர்

நெல்லை:

தென் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக 100 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. பிற்பகல் கருமேகங்கள் சூழ்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டது.பாளை புறநகர் பகுதியில் பரவலாக சாரல் மழை பெய்தது.

மணிமுத்தாறு அணை பகுதியில் நன்றாக மழை பெய்தது. 2.2 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சில இடங்களில் சாரலுடன் காற்று வீசியது.

இன்று காலை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரளவு மேகமூட்டம் காணப்பட்டது. காலை 10 மணிக்கு பிறகு நன்றாக வெயில் அடிக்க தொடங்கியது. இன்றும் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை அதிகபட்சமாக 102 டிகிரி வரை வெப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் இன்றும், நாளையும் மாலை நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.