நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி மனு கொடுத்த மாணவ- மாணவிகள். 
உள்ளூர் செய்திகள்

நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரி பள்ளி மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு

நெல்லை அருகே மணப்படை வீடு கிராம் வழியாக சென்ற அரசு பஸ் தற்போது இயங்கவில்லை. எனவே நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரி பள்ளி மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மாலை மலர்

நெல்லை:

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக கலெக்டர் அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று முதல் மீண்டும் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் கைக்குழந்தைகளுடன்  வந்து அளித்த மனுவில், நெல்லை டவுனை அடுத்த ராமையன்பட்டி ஊராட்சியில் சிவாஜி நகர், கண்டியப்பேரி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இங்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. அந்த இடங்களை அதிகாரிகள் துணையுடன் சிலர் தங்களது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய முயற்சிக்கின்றனர்.

இது தொடர்பாக நாங்கள் கேட்டால் எங்களை மிரட்டுகின்றனர். எனவே அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் அம்பை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், பட்டியலின பிரிவை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களுக்கு அம்பை தாலுகா அலுவலகத்தில் சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. அதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

வி.கே.புரத்தில் கடந்த வாரம் மர்மமான முறையில் இறந்த மாரிசேகரின் உறவினர்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், மாரிசேகர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

அவரது சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என கூறி இருந்தனர்.

தொடர்ந்து நெல்லை மணப்படை வீட்டை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் திரண்டு வந்து தங்களது பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்ல இயக்கப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என மனு அளித்தனர்.