நெல்லை:
தமிழகம் முழுவதும் சிவன் கோவில்களில் இன்று மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி தமிழக அரசின் உத்தரவின்பேரில் அனைத்து கோவில்களும் நேற்று இரவு வண்ண விளக்குகளால் ஜொலித்தன.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் இன்று மகாசிவராத்திரியை யொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக நேற்று முன்தினம் முதல் அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வந்தது. கோவிலில் உழவாரப்பணி, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணி உள்ளிட்டவற்றை மேற்கொண்டனர்.
இன்று நெல்லையப்பர் கோவில் நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கில் 12 மணி நேர தொடர் பக்தி கலை நிகழ்ச்சிகள் இன்று மாலை 6 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்குகிறது.
தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தேவார இசை கச்சேரி, இரவு 7.30 மணிக்கு சிவாலய நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், 8.30 மணிக்கு ஸ்ரீராம நாட்டியாலய மாணவிகளின் பரதநாட்டியம் நடக்கிறது.
அதன்பின்னர் நாதலய நாடடியம், பக்தி இன்னிசை உள்ளிட்டவை நடக்கிறது. நள்ளிரவு 1 மணிக்கு பக்தி சொற்பொழிவு, 2 மணிக்கு பரத நாட்டியம், 3 மணிக்கு சிவனருள் செல்வர் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து 5 மணிக்கு நடேச நாட்டியாலய மாணவிகளின் பரதநாட்டியம் நடக்கிறது.
இதனையொட்டி இன்று காலை கோவிலில் உள்ள ஆறுமுக நயினார் சன்னதி முன்பு நவதானியங்களால் ஆன நடராஜர் உருவம் வரையப்பட்டது. அம்பாள் சன்னதி முன்பு நவதானியங்களால் சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டது.
மேலும் மூலவர் சன்னதியில் நந்தி சிலை முன்பு வண்ண விளக்குகளால் நடராஜர் உருவம் அமைக்கப்பட்டது. கோவில் முழுவதும் கொசுமருந்து அடிக்கும் பணியும் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.