நெல்லை:
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது.
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால் இன்று காலையில் இருந்தே வேட்புமனு தாக்கல் செய்ய கடும் கூட்டம் அலைமோதியது.
நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கும் 4 மண்டல அலுவலகங்களில் வேட்புமனுத்தாக்கல் நடந்தது.
ஒவ்வொரு மண்டல அலுவலகத்திலும் 2 இடங்களில் வேட்புமனுக்கள் வாங்கப்பட்டது. இங்கு போட்டியிட விரும்புபவர்கள் இன்று தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்து கொண்டே இருந்தார்கள்.
அ.தி.மு.க., திமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பா.ஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., சமத்துவ மக்கள் கட்சி என பல்வேறு கட்சிகள் சார்பாகவும், ஏராளமான சுயேச்சைகளும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சில கட்சி வேட்பாளர்கள் போட்டி வேட்பாளராகவும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நெல்லை மாநகராட்சி வார்டுகளுக்கு மட்டும் இன்று 120-க்கும் மேற்பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுபோல அம்பை, சிங்கை, களக்காடு நகராட்சி வார்டுகளுக்கும் ஏராளமானவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் ஒதுக்கப்பட்ட இடங்களில் இன்று வேட்பாளர்கள் கூட்டம் கூட்டமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளுக்கும் அந்தந்த பேரூராட்சி அலுவலகத்தில் இன்று வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இங்கும் இறுதி நாள் என்பதால் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இதனால் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர் களுக்கு டோக்கன் வழங்கப் பட்டு, வரிசையாக வேட்பு மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சி ஆகியவற்றில் அடங்கியுள்ள 397 வார்டுகளுக்கு நேற்றுவரை 1228 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதியதால், இன்று வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
இன்று ஒரே நாளில் 600-க்கும் மேற்பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக இன்று மாலை வரை 1,800- க்கும் அதிகமானவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நாளை அந்தந்த மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும், நகராட்சி- பேரூராட்சி அலுவலகங்களிலும் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. நாளை பிற்பகல் பரிசீலனை முடிந்து ஏற்றுக்கொண்ட வேட்புமனுக்களை விபரம் அறிவிக்கப்படும்.
வாபஸ் பெற விரும்புகிறவர்கள் உடனடியாக வாபஸ் பெறலாம்.வருகிற 7-ந் தேதி பிற்பகல் வரை வாபஸ் பெற கால அவகாசம் உள்ளது. 7-ந் தேதி பிற்பகல் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.
19-ந் தேதி ஒரே நாளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிவார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும். 22-ம் தேதி வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.