நெல்லை:
சட்டமன்ற தேர்தலின் போது நாங்குநேரி தொகுதியில் உள்ள பனை மரம் ஏறும் விவசாயிகளின் நலன்கருதி, பனை மரம் ஏறும் எந்திரம் கண்டுபிடித்து, பயன் பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரூபி மனோகரன் வாக்குறுதி கொடுத்திருந்தார்.
அந்த தேர்தலில் அபார வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆன ரூபி மனோகரன், பனை மரம் ஏறும் எந்திரங்கள் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு தமிழக அரசையும், முதல்வரையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில், நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவசாய பட்ஜெட்டில், பனை மரம் மற்றும் அதுசார்ந்த தொழில் களை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
குறிப்பாக, பனை மரம் ஏறும் நவீன எந்திரங்கள் கண்டுபிடிப்போர் ஊக்கு விக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு சார்பில் விருதும் வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது.இதையடுத்து, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, நாங்குநேரி ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் ஆயிரக் கணக்கான பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் உள்ளனர். பனை மரம் ஏறும் தொழில் காலத்துக்கு ஏற்றவாறு நவீன மயத்தை எட்டினால், ஏழைகளாக உள்ள அந்த தொழிலாளர்கள் அனை வரும் முதலாளிகளாக மாறிவிடுவார்கள்.
பனை மரம் ஏறும் நவீன எந்திரம் அனைத்து பனை விவசாயிகளிடமும் வந்து சேர்ந்துவிட்டால், பனைத் தொழில் பிரம்மாண்ட வளர்ச்சியை எட்டும். பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பொருளாதார வளம் பெறும்.
அத்தகையை நிலையை நோக்கி அடியெடுத்து வைக்கும் விதமாக, தமிழக விவசாய பட்ஜெட்டில் பல நல்ல செய்திகளை பனை விவசாய பெருமக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பனை மரம் ஏறும் எந்திரங்கள் கண்டுபிடிப் போருக்கு விருது வழங் கப்படும் என்கிற அறிவிப்பை நானும், என்னுடைய நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி மக்களும் மனதார வரவேற்கிறோம்.
அதேபோல், பனங் கருப்பட்டி உள்ளிட்ட பனைப் பொருட்களின் விற்பனை சந்தையையும் அரசு சார்பில் நாங்குநேரி தொகுதியில் ஏற்படுத்த தக்க நடவடிக்கை எடுக்கவும் இந்த நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.