கலை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் விஷ்ணு வழங்கிய போது எடுத்தபடம். 
உள்ளூர் செய்திகள்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ. 1.29 லட்சத்தில் நிதி உதவி- கலெக்டர் வழங்கினார்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ. 1.29 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

நெல்லை:

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்களிடம் இன்று கோரிக்கை மனுக்களை கலெக்டர் விஷ்ணு பெற்றார்.

பின்னர் மாவட்ட அளவிலான கிராமிய நடனம், ஓவியம், பாரநாட்டியம் உள்ளிட்ட கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. 70 ஆயிரம் மதிப்பில் முதல் 3 பரிசுகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழக கலைப்பண்பாட்டு துறையின் கீழ் செயல்படும் நாட்டுப்புற கலைஞர்களுக்கான நலவாரியத்தின் மூலம்  ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 500 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் 27 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

 ரூ. 10 ஆயிரம் மதிப்பில்  7  பேருக்கு மூக்குக் கண்ணாடிக்கான நிதியுதவி, நாட்டுப்புற கலைஞர்களின் குழந்தைகள் 15 பேருக்கு ரூ. 29 ஆயிரத்து 500 மதிப்பில் கல்வி நிதி உதவி, ஒருவருக்கு திருமண நிதி உதவி ரூ. 5 ஆயிரம் மற்றும் 4 பேருக்கு ஈமச்சடங்கிற்கு ரூ. 85 ஆயிரம்   வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சமூகநலத்திட்ட துணை கலெக்டர் குமாரதாஸ், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் ஜெயஅருள்பதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.