நெல்லை:
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள குருவிகுளத்தை அடுத்த அத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகள் முருகேஸ்வரி (வயது 36).
சம்பவத்தன்று இவர் கல்லிடைக்குறிச்சியில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு செல்வதற்காக நெல்லை புது பஸ் நிலையம் வந்தார்.
அங்கிருந்து கல்லிடைக் குறிச்சிக்கு பஸ் ஏற சென்றார். அப்போது அவரது பையில் இருந்த மணிபர்ஸ்சை கூட்ட நெரிசலில் பின்னால் இருந்த ஒருவர் எடுத்து விட்டார்.
பஸ்சுக்குள் சென்ற பிறகு முருகேஸ்வரி தனது பையை சரிபார்த்தார். அப்போது, அதில் மணிபர்ஸ் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.
அந்த மணிபர்சில் 5 பவுன் தங்க சங்கிலி, ரூ.1,500 ரொக்கப்பணம் மற்றும் ஒரு விலை உயர்ந்த செல்போன் ஆகியவை இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இதுகுறித்து முருகேஸ்வரி மேலப்பாளையம் குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்தவர்களை தேடி வருகிறார்கள்.