கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் வாக்குப்பதிவு குறைவுக்கு காரணம் என்ன?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ளது. இதில் நெல்லை மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுகிறது.

மாலை மலர்

நெல்லை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ளது. ஒட்டு மொத்தமாக தமிழக அளவில் 61 சதவீதம் பொதுமக்களே வாக்களித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 70 சதவீதம் பேரும், தென்காசி மாவட்டத்தில் 64 சதவீதம் பேரும் வாக்களித்தனர். ஆனால் நெல்லை மாவட்டத்தில் 59 சதவீதம் பேர் வாக்களித்து உள்ளனர்.

அண்டை மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசியை ஒப்பிடுகையில் நெல்லை மாவட்டத்தில் வாக்குப்பதிவு சற்று குறைந்துள்ளது. நெல்லை மாநகராட்சியில் 55 வார்டு களுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது.

காலை 7 மணி முதல் வாக்குச்சாவடிகள் களை கட்டிய நிலையிலும், வாக்காளர்கள் ஓட்டு போட அதிக அளவு ஆர்வம் காட்டவில்லை.

காலை நேரங்களில் நெல்லை மாநகரில் உள்ள வாக்குச்சாவடிகளில் வழக்கமாக வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருப் பதை காண முடியும்.

ஆனால் நேற்று மேலப்பாளையம் மண்டலத்தில் மட்டுமே வரிசையில் பொது மக்கள் நிற்பதை காண முடிந்தது. நெல்லை, தச்ச நல்லூர், பாளை மண்டலங் களில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 10-க்கும் குறைவான வாக்காளர்களே நின்று கொண்டிருந்தனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வார்டு மறுவரையறை செய்யப் பட்டது. இதில் வார்டுகள் பிரிக்கப்படும் போது தொலைவில் உள்ள வார்டுகள் சேர்க்கப்பட்டது தொடர்பாக பல்வேறு இடங்களில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

சில இடங்களில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். களக்காடு அருகே உள்ள கீழபத்தை கிராமத்தில் 950 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த தேர்தல் வரை கீழபத்தை தனி வார்டாக செயல்பட்டு வந்தது. தற்போது களக்காடு பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் வார்டு சீரமைப்பு செய்யப்பட்டது.

இதில் தனி வார்டாக இருந்த கீழபத்தை 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு வார்டுகளுடன் இணைக்கப்பட்டது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஓட்டு போடாமல் புறக்கணித்தனர். இதே போல் மணிமுத்தாறு பேரூராட்சிக்குட்பட்ட விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள ஆலடியூர் கீழ் பகுதி 12-வது வார்டாக இருந்தது.

இந்த கிராமத்தில் 300-க் கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசித்து வருகிறார்கள். வார்டுகள் மறுசீரமைப்பின் போது இந்த 12-வது வார்டு 5-வது வார்டுடன் இணைக் கப்பட்டது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று தேர்தலை புறக்கணித்தனர்.

இதே போல் மாவட்டத்தில் சில இடங்களில் வார்டு மறுவரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுவும் வாக்குப்பதிவு குறைவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

வார்டு மறுவரைக்கு பின்னர் வழக்கமாக வாக்களிக்கும் வாக்குச் சாவடிகளும் பல்வேறு இடங்களில் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் பொது மக்கள் வாக்குச்சாவடிகளை தேடி அலைந்த வண்ணம் இருந்தனர்.

பாளை என்.ஜி.ஓ. காலனி யில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்கள் அங்கும் இங்கும் அலைந்ததை காண முடிந்தது. சில வாக்காளர்கள் வரிசையில் நின்று விட்டு தங்களுக்கு அங்கு ஓட்டு இல்லை என தெரிந்து கொண்டு வேறொரு வாக்குச் சாவடிக்கு சென்றனர்.

குடும்பத்தோடு வந்திருந்த சிலருக்கு கணவருக்கு ஒரு பூத்திலும், மனைவிக்கு ஒரு பூத்திலும் ஓட்டுகள் இருந்தது. இதனால் வாக்காளர்கள் செய்வதறியாது திணறினர்.

நெல்லை சந்திப்பு ம.தி.தா.இந்து பள்ளியில் 7 பூத்கள் அமைக்கப்பட்டு இருந்தது. பல வாக்காளர்கள் ஓட்டு எங்கே உள்ளது என தெரியாமல் திண்டாடிய நிலையில் வாக்காளிக்காமல் திரும்பி சென்றனர். இதே போல் பாகம் எண், வரிசை எண் பெருவதிலும் பல்வேறு குளறுபடிகள் காணப்பட்டது.

பல்வேறு பூத்களில் அதற்கான எண், வார்டு எண் ஆகியவை காணப்பட வில்லை. புதிய வாக்காளர்கள் பலர் பட்டியலில் குறிப்பிட்ட எண்ணுக்கு சென்று வாக்களிக்க நின்றால் அங்கு அவர்களுக்கு வாக்கு இல்லாமல் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் சிலர் வார்டுகள் மாற்றத்தால் வாக்களிக்க விருப்பம் இன்றி திரும்பி சென்றனர். இதுகுறித்து வாக்காளர்கள் கூறும் போது, யாருக்கு எந்த பூத்தில் ஓட்டு உள்ளது என்பது தெரியாமல் கண்ணை கட்டியது போல் உள்ளது.

வாக்குச்சாவடி அமைந் துள்ள இந்த வார்டுக்கு எங்கு பூத் உள்ளது என்பதற்கான வழிகாட்டி பலகைகள் அமைத்திருக்க வேண்டும். முதியவர்களும், பெண்களும் ஒவ்வொரு வாக்குச் சாவடியாக செல்லும் போது வீண் அலைச்சல் ஏற்பட்டது என தெரிவித்தனர்.