கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் செட்டிமேடு, ஏர்மாள்புரம், திருப்பதியாபுரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இந்த நிலையில் செட்டிமேடு பகுதியை சேர்ந்த விவசலீயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களில் நேற்று முன்தினம் காட்டு யானைகள் புகுந்து அப்பகுதியில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வேரோடு சாய்த்து நாசம் செய்துள்ளது.
நேற்று இரவு மீண்டும் மணிமுத்தாறு அருகே ஏர்மாள்புரம் சுற்று பகுதியில் யானைகள் கூட்டமாக வந்து விளைநிலங்களில் நெற்பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் இப்பகுதியில் இரவு நேரங்கள் மட்டுமின்றி பகலிலும் யானைகள் வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், அடிக்கடி யானைகளின் தொந்தரவு இருந்து கொண்டு தான் உள்ளது. எங்களால் விவசாயம் சரியாக செய்யமுடியவில்லை.
வனத்துறை சோலார் மின்வேலி மற்றும் அகலிகள் வெட்டினாலும் அவற்றையும் கடந்து யானைகள் வந்து விளைநிலங்களை சேதப்படுத்துகிறது. இதனால் நாங்கள் ஆண்டுதோறும் பெரும் வருவாய் இழப்பை சந்திக்கிறோம்.
நாங்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் யாரும் வரவில்லை. எனவே எங்கள் ஊர் பகுதி விவசாயிகள் எல்லாரும் சேர்ந்து யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டினோம்.
எனவே காட்டு விலங்குகளால் பாதிப்புகள் ஏற்படாதவாறு வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.