நெல்லை:
டெல்லியை சேர்ந்த சமூக சேவகர் கிரன் வர்மா. இவர் ரத்ததான விழிப்புணர்வுக்காக 21 ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி திருவனந்த புரத்தில் இருந்து தொடங்கினார்.
இன்று நெல்லைக்கு வந்த அவர் கூறியதாவது:-
நான், கடந்த 2018-ம் ஆண்டில், ரத்த தானத்தை வலியுறுத்தி இந்தியா முழுவதும் 16,000 கிலோ மீட்டர் நடை பயணம் செய்தேன்.
எனது தொண்டு நிறுவனம் மூலம் யாரிடமும் கட்டணம் வசூலிக்காமல் ரத்த தானம் மூலம் 35,000-க்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறோம்.
மேலும் டெல்லியில் ரூ.10-க்கு கடந்த ஒரு வருடத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு களை வழங்கி உள்ளோம்.
இந்தியாவில் ரத்தத்திற்காக காத்திருந்து யாரும் இறக்கக் கூடாது என்பதற்காக, ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதே என்னுடைய இந்த நடை பயணத்தின் நோக்கம்.
அதிகரித்து வரும் கொரோனா காரணமாக, இந்தியாவில் தன்னார்வ ரத்த தானம் கடந்த 2 ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்து வருகிறது.
ரத்த வங்கிகள் மற்றும் மருத் துவ மனைகள் ரத்தத்தில் வறண்டு போகாமல் இருக்க, இந்த கடினமான நேரத்திலும் மக்களை வெளியே சென்று ரத்த தானம் செய்ய ஊக்குவிக்க தான் இந்த நடைபயணம்.
இதுவரை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, மாகி, கண்ணூர், காசர் கோடு, மங்களூரு, உடுப்பி, சிக்மங்களூரு, பெங்களூர், ராமநகரா, மாண்டியா, மைசூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை கடந்து 1,700 கிலோ மீட்டருக்கும் மேல் கடந்து நடைபயணம் வந்துள்ளேன்.
அடுத்ததாக நாகர்கோவில், புதுச்சேரி, சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்ல உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.