நெல்லை:
நெல்லை மாவட்ட நீர் நிலைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில் நெல்லை நீர்வளம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது.
அதன் மூலம் நீர் பாதுகாப்புக்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வி.எம்.சத்திரம், உடையார்பட்டி, மூளிகுளம், பேட்டை பெரியகுளம் உள்ளிட்ட குளங்களை இந்த அமைப்பின் மூலம் தூர்வாரி பாதுகாக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த குளங்களில் ஆகாயத்தாமரையை மறுபயன்பாட்டின் மூலம் உரம், காகிதம், கைவினை பொருட்கள் ஆகிய புதிய பொருட்கள் தயாரிக்கும் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நடுக்கல்லூரில் உள்ள மறுபயன்பாட்டு மையத்தில் இன்று புதிய திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
இதற்காக பேட்டை பெரியகுளத்தில் சேகரிக்கப்பட்ட ஆகாயத்தாமரைகள் அங்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள 3 எந்திரங்களை மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டது. அதன்படி அதிலிருந்து உரம், காகிதம், கைவினை பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
இதற்காக நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளை சேர்ந்த பெண்கள், இளைஞர்களுக்கு 12 மாதங்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒரு வருட கால பயிற்சியில் 12 முதல் 15 ஆயிரம் டன் ஆகாயத்தாமரைகள் மறுசுழற்சிக்கு உட்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பழனி, பாப்பாக்குடி யூனியன் துணைத்தலைவர் மாரிவண்ணமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பலாப்பழ ஓடையில் பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை கலெக்டர் விஷ்ணு இன்று தொடங்கி வைத்து பேசியதாவது:-
நெல்லை நீர்வளம் அமைப்பின் மூலம் பலாப்பழ ஓடையில் முதற்கட்டமாக 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளது. 3 மாதங்களில் முறையாக சுத்தம் செய்யப்பட்டு அதன் கரைகள் பலப்படுத்தப்படும்.
அங்கு குப்பைகள் கொட்டாத வகையில் வேலிகள் அமைக்கப்படும். வேலிக்கு உட்புறமாக தேன், பழம் பெறக்கூடிய மரங்கள் நடப்படும். பலாப்பழ ஓடையை சுற்றி இயற்கையை ரசித்தபடி செல்ல இயற்கை நடைபாதை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். 2 மாதத்தில் முதல் கட்டமாக பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய்கள் உள்ளிட்ட 3 கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
அதன் பின்னரும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கமிரப்பு அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை, வருவாய் துறை, மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.
மாவட்டத்தில் இதுவரை தாமிரபரணியை ஒட்டிய நீர்நிலைகளில் 60 ஹெக்டேர் ஆக்கிரமிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.