திசையன்விளை:
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திசையன் விளை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் அ.தி.மு.க.9 வார்டுகளில் வெற்றி பெற்றது.
தி.மு.க.2 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், பா.ஜனதா ஒரு வார்டிலும், தே.மு.தி.க. ஒரு வார்டிலும் சுயேட்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.
பேரூராட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் வருகிற 4&ந்தேதி நடைபெற உள்ளது.
வெற்றிபெற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 9 பேர் மற்றும் பா.ஜனதா கவுன்சிலருடன் சேர்ந்து தலைவர் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க. முயற்சி செய்து வருகிறது.
தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க, சுயேட்சை கவுன்சிலர்கள் உதவியுடன் தி.மு.க. கட்சியும் தலைவர் பதவியை கைபற்ற முயற்சி செய்து வருகிறது.
எதிர் அணியில் உள்ள கவுன்சிலர்களை தங்கள் அணிக்கு கொண்டுவர இரு அணியினரும் முயற்சி செய்து வருகின்றனர்.
மறைமுக தேர்தல் நடைபெற உள்ளதால் இரு அணியை சேர்ந்தவர்களுக்கும் கடும் போட்டி நடந்துவருகிறது.
கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு ரூ.50 லட்சம் வரை பேரம் நடப்பதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க கவுன்சிலர்கள் தேர்தலில் வெற்றிபெற்ற அன்றே தங்கள் ஆதரவு கவுன்சிலர்களுடன் வெளியூர் சென்றுவிட்டனர்.
அவர்களை தங்கள் பக்கம் இழுக்க இரு அணியினரும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் மூலம் முயற்சி செய்துவருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க வெற்றி பெற்ற சுயேட்சைகளில் 2 பேர் பேரூராட்சி தலைவர் பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மறைமுக தேர்தல் மூலம் தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளதால் தலைவர் பதவியை கைப்பற்றுவது அ.தி.மு.க.வா? அல்லது தி.மு.க.வா? அல்லது தி.மு.க. கூட்டணி ஆதரவு பெற்ற சுயேட்சையா? என்பது 4-ந்தேதி தெரியவரும்.