1996- ம் ஆண்டு முதன் முதலாக நெல்லை மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் ஒன்றோடு ஒன்று இணைந்திருந்த நெல்லை, பாளை, மேலப்பாளையம் ஆகிய மூன்று நகராட்சிகளும் ஒன்றிணைக்கப்பட்டு சில கிராம பஞ்சாயத்துகளும் இதில் சேர்க்கப்பட்டு, 55 வார்டுகளுடன் கூடிய மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
மாநகராட்சி என்று சொன்னாலும் சுற்றியுள்ள புறநகர் பகுதிகள் அனைத்தும் இன்னும் கிராமங்களாகவே காட்சியளிக்கின்றன. பால் கட்டளை, கரையிருப்பு, பொட்டல், கோட்டூர் என மாநகராட்சியின் வட பகுதிகள் அனைத்தும் கிராமப்புற பகுதி ஆகும்.
கடந்த 7 ஆண்டுகளாக கவுன்சிலர்களையும் மேயர், துணை மேயர், மண்டல சேர்மன்களையும் காணாத மாநகராட்சி இப்போது தேர்தலை சந்தித்து மேயர்- துணை மேயர், மண்டல சேர்மன்களை வரவேற்கத் தயாராக இருக்கிறது.
55 வார்டுகளிலும் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நேற்று (2-ந்தேதி) மாநகராட்சி மைய அலுவலகத்தில் பதவி ஏற்றனர். 55 கவுன்சிலர்களும் பதவியேற்ற பிறகு நாளை (4-ந்தேதி) மேயர், துணை மேயர் தேர்தல் நடக்க இருக்கிறது. மேயர் துணை மேயர் பதவியேற்றதும், இவர்களுக்கு சில முக்கிய சவால்கள் காத்திருக்கிறது.
ஆம்! நெல்லை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் ஏராளமாக நிலுவையில் உள்ளது. சில இடங்களில் சாலைகள் என்பதே எங்கும் இல்லாத அளவுக்கு குண்டும் குழியுமாக, மணல்மேடுகள் ஆக, திட்டுத்திட்டாக உறைந்து காணப்படுகிறது.
நெல்லை மாநகராட்சிக்குள் 2 தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. திருவனந்தபுரம் ரோடு, மதுரை ரோடு. இந்த இரண்டு சாலைகளிலும் வடிகால்கள் முற்றிலும் சிதைந்து காணப்படுகிறது.
மழைநீர் ஆங்காங்கே தேங்கி அவ்வப்போது சாலைகள் உடைய இதுவே மூல காரணம். பெரும்பாலான மாநகராட்சிகளில் நகர்புறங்களில் வடிகால்கள் மிகவும் நேர்த்தியாக அழகாக காட்சியளிக்கும்.
ஆனால் நெல்லை மாநகராட்சியில் இந்த பிரதான சாலையிலேயே வடிகால்கள் இல்லாததால், சாலைகள் மிகவும் மோசமாக மாறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்கிறது.
இங்கு மட்டுமல்ல இதுபோல பேட்டை ரோடு, குற்றாலம் ரோடு, சங்கரன்கோவில் ரோடு, திருச்செந்தூர் ரோடு என பல முக்கிய மாநிலச் சாலைகளும் மழைநீர் சாக்கடை வடிகால் இல்லாமல் தண்ணீர் தேங்கி விரைவில் சிதைந்து விடுகிறது.
ஒவ்வொரு முறை சாலை அமைக்கும் போதும் அந்த சாலை அரை அடி உயரம் உயர்ந்து, இரண்டு வருடத்தில் வீடுகள் பள்ளத்தில் சாலைகள் மேடாகவும் காட்சியளிக்கின்றன.
இதை மாற்ற பழைய சாலைகளை தோண்டி அதன் மீது புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் இந்த உத்தரவு காற்றில் பறந்து விடுகிறது.
கோடைகாலத்தில் மட்டு மல்லாமல், மழைக் காலத்திலும் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. பல இடங்களில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பெற்றும் பல மாதங்களாக தண்ணீர் வருவதில்லை.
அப்போது அனைவருக்கும் நன்றாக தண்ணீர் கிடைக்கும் என்ற ஒற்றை வரி பதில் கூறுகிறார்கள். ஆனால் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது, முடிந்தபாடில்லை.
அதுவும் தற்போது புதிதாக குடிநீர் குழாய்கள் வீட்டிற்கு மேல்புறம் பதித்துள்ளார்கள். இங்கு தண்ணீர் போதிய அளவு வருமா? என்பது அனைத்து பொது மக்களுக்கும் கேள்விக்குறி ஆகவே உள்ளது.
இப்போது மாநகராட்சியில் ஒரு பகுதியில் தினசரி காலை, மாலை என 2 நேரமும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பகுதியில் ஒரு நாளைக்கு ஒருமுறை தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இன்னும் சில பகுதிகளில் இரண்டு நாளைக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருகிறது. மேலும் சில பகுதிகளுக்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் எட்டிப்பார்க்கிறது. இப்படி நெல்லை மாநகராட்சியிலேயே பலவித குழப்பங்களுடன் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால் குடிநீர் கட்டணம் மட்டும் அனைவருக்கும் சமமாக வசூலிக்கப்படுகிறது.
எனவே புதிதாகப் பொறுப்பேற்கும் மேயர், துணை மேயர், மண்டல சேர்மன்கள், கவுன்சிலர்கள் இந்தப் பிரச்சினைகளில் தலையிட்டு அனைவருக்கும் எந்தவித பாகுபாடும் இன்றி ஒரே முறையில் தண்ணீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை மாநகராட்சியில் இணைந்துள்ள புறநகர் பகுதிக்கு இன்னும் குடிநீர் குழாயை பதிக்கப்படவில்லை. அந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் பதித்து, அங்கும் குடிநீர் கிடைக்கும் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
இதுபோக நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், பொருட்காட்சி திடலில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம், நேருஜி சிறுவர் கலையரங்கம், பாளைபஸ் நிலைய விரிவாக்க கட்டிடங்கள் என்று அனைத்து கட்டிடங்களையும் திறந்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இதுபோக டவுன் மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட் ஆசிய பகுதிகளில் புதிய வணிக வளாகங்கள் கட்டி திறக்கப்பட வேண்டியதும் உள்ளது. பழைய தெரு விளக்குகளே பல இடங்களில் எரியாமல் இருட்டாக காட்சியளிக்கும் நேரத்தில், புறநகர் பகுதிகளில் தெருவிளக்கே இல்லாமல் இன்னும் ஏராளமான பகுதிகள் உள்ளன. அங்கு விளக்குகள் அமைக்க வேண்டியது நெல்லை மாநகராட்சியின் தலையாய பணி.
இதுபோக புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி ஆணை உட்பட பல்வேறு திட்டங்களை செயல் படுத்துவதற்கும் போதிய ஊழியர்கள் இல்லாமல் திணறும் நிலை ஏற்பட்டு கொண்டிருக்கிறது. துப்புரவு தொழிலாளிகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே பணியில் அமர்த்தப்பட்டு வருகிறார்கள்.
மேலும் பல இடங்களில் ஒப்பந்த முறையில் குப்பைகள் எடுக்கப்படுவதால் பல இடங்களில் குப்பைகள் எடுக்கப்படாமல் தேங்கி பல்வேறு தெருக்கள் துர்நாற்றம் அடிக்கிறது. இவைகள் அனைத்துமே வரப்போகின்ற புதிய மேயர் மற்றும் துணை மேயருக்கு சவால்களாக காத்திருக்கின்றன.
நெல்லை மாநகராட்சியில் நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகமாகி போக்குவரத்து நெரிசல் அதிகம் ஆகிறது. ஆனால் இருக்கும் சொற்ப சாலைகள் போதுமா? எனவே பல்வேறு இணைப்பு சாலைகள் போடவும் திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளன. ஆனால் இணைப்புச் சாலைகள் தான் இன்னும் வரவே இல்லை.
எனவே டவுன் எஸ்.என் ஹைரோடுக்கு இணையாக மற்றொரு சாலை, திருவனந்தபுரம் ரோட்டிற்கும், தெற்கு பைபாஸ் ரோட்டிற்கும் ஒரு இணைப்புச் சாலை உள்பட பல்வேறு சாலைகளும் புதிதாக அமைக்கப்பட வேண்டியுள்ளது.
வரப்போகின்ற மேயர், துணை மேயர்கள் இந்த திட்டங்களையெல்லாம் நிறைவேற்றினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பார்கள். நெல்லை மாநகரில் வசிக்கும் பொதுமக்கள் இந்த பிரச்சினைகள் திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். நெல்லை மாநகராட்சியில் பொழுது போக்குவதற்கு பெரிய பூங்கா எதுவுமே இல்லை.
எனவே பெரிய பூங்காக்கள், சிறுவர்கள் விளையாட்டுடன் கூடிய பெரிய அரங்குகள், நயினார்குளம் படகு குழாம் உள்பட ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களும் நிறுவப்பட வேண்டும் என்று நெல்லை மாநகர மக்கள் நீண்ட நாட்களாக விரும்புகிறார்கள். இந்த கனவுகள் கனவாகவே இருக்கிறது.