களக்காடு:
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சிதம்பரபுரம், சிவபுரம், கள்ளியாறு, அரசபத்து, மஞ்சுவிளை, காமராஜ்நகர், மேலவடகரை, கீழவடகரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தை, கடமான்கள் அட்டகாசம் செய்து வருகின்றன.
சிதம்பரபுரத்தில் ஒருவரை கரடி கடித்து குதறியுள்ளது. கீழவடகரை, காமராஜ்நகர் பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட வாழைகளை கரடிகள் நாசம் செய்துள்ளன.
இந்நிலையில் மேலவடகரையில் மாரியப்பனுக்கு (52) சொந்தமான விளைநிலத்தில் புகுந்த கரடிகள்100-க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மே முதல் ஜூலை மாதங்களில் பனம் பழம், வாழைப்பழம் மற்றும் கொல்லம் பழம் (முந்திரி) ஆகிய பழங்கள் விளையும் பருவம் என்பதால் வனவிலங்குகளான கரடி, குரங்கு போன்றவைகள் காட்டை விட்டு வெளியேறி விளைநிலங்களுக்குள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எனவே விவசாயிகள் யாரும் விளைநிலங்களில் இரவு நேரங்களில் தனியாக படுத்து உறங்குவதையோ தனியாக நடப்பதையோ முற்றிலும் தவிர்க்குமாறு வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வனவிலங்குகளை தோட்டங்களில் பார்க்கும் பட்சத்தில் உடனடியாக 7598401438, 9171513119 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.