மாநகராட்சி அலுவலகத்தில் வாக்குச்சீட்டு பொருத்துவதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து செல்லப்பட்ட காட்சி. 
உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகராட்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி தொடங்கியது

நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கும் நடைபெற உள்ள தேர்தலையொட்டி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்காளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி இன்று தொடங்கியது.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் ஆகிய இடங்களில் மொத்தம் 388 பதவி இடங்களுக்கு 1,790 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்த வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே வேட்பாளர்களுக்கான பெயர் மற்றும் சின்னங்கள் அடங்கிய வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணி கலெக்டர் விஷ்ணு உத்தரவின்பேரில் மாவட்டத்தில் 4 இடங்களில் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து நேற்று எந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு எந்தெந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் என்ற பணியும் கணினி குலுக்கல் முறையில் முடிவு செய்யப்பட்டுவிட்டது.

நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கும் நடைபெற உள்ள தேர்தலையொட்டி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்காளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி இன்று தொடங்கியது.

இதற்காக மாநகராட்சி மைய அலுவலகத்தில் வைக் கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை இன்று ஊழியர்கள் அறையிலிருந்து வெளியே எடுத்து தயார் நிலையில் வைத்தனர்.

தொடர்ந்து ஒவ்வொரு வாக்குப்பதிவு எந்திரத்திலும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டு பொருத் தப்பட்டது.

இந்த பணியின் போது வேட்பாளர்கள் பங்கேற்கலாம் என்று மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இதையடுத்து ஒரு சில கட்சியின் வேட்பாளர்கள் இன்று மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு வந்து வாக்குச்சீட்டு பொருத்தும் பணியினை பார்வையிட்டுச் சென்றனர்.

இதற்கிடையே வாக்குச்சீட்டு பொருத்தும் போது எந்திரத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்வதற்காக பெங்களூரிலிருந்து பெல் நிறுவன என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

வருகிற 16-ந்தேதிக்குள் மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி பணியை முடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

இதனால் மாவட்டத்தில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.