விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது வினியோகித்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

நெல்லை சமரச தீர்வு மையத்தில் 3 நாள் சிறப்பு அமர்வுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

நெல்லை சமரச தீர்வு மையத்தில் 3 நாள் சிறப்பு அமர்வுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நெல்லை:

தமிழகத்தில் சமரச மையம் ஆரம்பிக்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி நாளை (சனிக்கிழமை) சமரச தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வருகிற 11&ந் தேதி முதல் 13&ந் தேதி வரை மாவட்ட சமரச மையத்தில் சிறப்பு அமர்வுகள் மூலம் பலதரப்பட்ட வழக்குகள் பேசி தீர்வு காணப்பட உள்ளன.

இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமரச மையத்தில் சிறப்பு அமர்வுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஓட்டும் நிகழ்ச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடந்தது.

இதில் மாவட்ட முதன்மை நீதிபதி நசீர்அகமது கலந்து கொண்டு அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஓட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மேலும் சிறப்பு அமர்வுகள் குறித்த வாகன பிரசாரத்தையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது வினியோகித்தார்.

பிரசார வாகனம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று சிறப்பு அமர்வுகளில் பங்கேற்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், சார்பு நீதிபதியுமான பிஸ்மிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.