நெல்லை:
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான சித்திரை வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படும் புனித திருநாள் அட்சய திருதியை ஆகும். இந்த நாளை இந்து புராணங்களில் பரசுராமர் பிறந்தநாள், குபேரனுக்கு இழந்த செல்வங்கள் கிடைத்த நாள், புனிதமிக்க கங்கை நதி பூமிக்கு வந்த நாள் என பல்வேறு காரணங்கள் கூறி கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.
இந்த நாளில் தங்கம், மஞ்சள், உப்பு உள்ளிட்டவைகள் வாங்கினால் ஆண்டு முழுவதும் வளம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த சிறப்புக்குரிய நாளில் நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் கோவிலில் அமைந்துள்ள கனக மகாலட்சுமி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அட்சய திருதியை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து புதிய பட்டு பீதாம்பரம் அணிவிக்கப்பட்டு ராஜமாதங்கி அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனையும், மகா அர்ச்சனையும் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அம்பாளுக்கு மஞ்சள், பழம் உள்ளிட்டவைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.