நெல்லை:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 37), பா.ஜனதா நிர்வாகி.
இவர் கடந்த 15-ந் தேதி நெல்லை முன்னீர்பள்ளம் அருகே வெள்ளநீர் கால்வாயில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
போலீஸ் விசாரணையில் ஈரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், செந்தில் குமாருக்கும் சமூக வலைதளமான ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டதும், இது தொடர்பான தகராறில் செந்தில் குமாரை ஒரு கும்பல் ஈரோட்டில் இருந்து காரில் கடத்தி வந்து கொன்று, கால்வாயில் உடலை வீசி சென்றது தெரிய வந்தது.
இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஈரோடு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியை சேர்ந்த ரெங்கராஜன் (30), மலையாண்டி (34) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் நெல்லையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் இந்த கொலையில் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
இவர் கடந்த சில வருடங்களாக திண்டுக்கல்லில் ஒரு லாரி செட்டில் வேலை பார்த்து வருகிறார். அப்போது செந்தில் குமாருடன் பேஸ்புக்கில் பழகிய பெண்ணுடன் பாலகிருஷ்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் அந்த பெண் பாலகிருஷ்ணனுடன் நெருங்கி பழகியதாகவும், இதனால் செந்தில் குமாருடன் பேசுவதை தவிர்த்து வந்ததும் தெரிய வந்தது.
இதையறிந்த செந்தில் குமார் அந்த பெண்ணிடம் தொடர்ந்து பேசுமாறு தொல்லை கொடுத்ததாகவும், இதனை அந்த பெண் பாலகிருஷ்ண னிடம் கூறவே அவர் செந்தில்குமாரை தீர்த்துகட்ட திட்டம் வகுத்துள்ளார்.
அதன்படி, அந்த பெண் மூலம் செந்தில் குமாரை ஈரோடு வரவழைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் செந்தில் குமாரை தாக்கி உள்ளனர்.
இதில் அவர் இறந்து போகவே அதிர்ச்சியடைந்த பாலகிருஷ்ணன் தன்னுடன் லாரி செட்டில் வேலை பார்த்த 2 பேர் மற்றும் தனது நண்பர்களான ரெங்கராஜன், மலையாண்டி மற்றும் வல்லநாட்டை சேர்ந்த பூதத்தான் ஆகியோருடன் சேர்ந்து செந்தில் குமார் உடலை காரில் கொண்டு வந்து முன்னீர்பள்ளம் வீசி சென்றது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
இதைத்தொடர்ந்து ரெங்கராஜன், மலையாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில், இன்று பூதத்தான் உள்பட இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 3 பேரை பிடித்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
தலைமறைவாக உள்ள பாலகிருஷ்ணன் மற்றும் ஈரோடு பெண் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.