விபத்தில் பலியான மாரிமுத்து. 
உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பலி

நெல்லை அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி தெற்கூரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் அதே பகுதியில் உள்ள செங்கல்சூளையில் கூலி வேலை செய்து வருகிறார்.

இவர் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு 10 மணி அளவில் நெல்லை சாலையில் கிருஷ்ணாபுரம் அருகே வந்து கொண்டிந்தார்.

அதேபோல் கீழ நாட்டார்குளம் இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான வினோத் என்பவரும் தனது இருசக்கர வாகனத்தில் நெல்லையில் இருந்து கீழே நாட்டார்குளத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது விட்டிலாபுரம் விலக்கு பகுதியில் திடீரென இருவரின் இருசக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வினோத் படுகாய மடைந்து உயிருக்கு போராடிய நிலை யில் உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

தகவலறிந்த சிவந்திபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரிமுத்து உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்த மாரிமுத்துவின் உடல் சுமார் 2 மணி நேரம் அதே இடத்தில் கிடந்ததால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் தற்போது நெல்லை- திருச்செந்தூர் தொழில்வழிச்சாலை பணிகள் ஆங்காங்கே நடந்து வருவதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.