நெல்லை:
தமிழக காவல் துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட காவல் உதவி என்ற செல்போன் செயலி குறித்து நெல்லை மாநகர குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெகதா மற்றும் போலீசார் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இன்று பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதிய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த குழந்தைகள் இளம் பெண்கள் மற்றும் வயதான முதியவர்களுக்கு காவல் உதவி செயலி குறித்து எடுத்துரைக்கப்பட்டது.ஆபத்தான காலங்களில் பெண்கள் உடனடியாக புகார் அளிக்க உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி குறித்து விளக்கமளித்த போலீசார் அதிலுள்ள 60-க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்கள் குறித்தும் அவர்களுக்கு தெரிவித்தனர்.
இந்த செயலி மூலம் கட்டுப்பாட்டு அறையுடன் நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும் , புகைப்படங்கள் மூலமாகவும், சிறிய அளவிலான வீடியோ வாயிலாகவும் இந்த செயலி மூலமாக புகார் அளிக்க முடியும் என்றும், போக்குவரத்து விதிமீறல்கள் குறித்தும் புகார் செய்யலாம் என்றும் போலீஸார் தரப்பில் இருந்து அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.