வள்ளியூரில் தினசரி சந்தையினை தொடங்கி வைத்த சபாநாயகர் அப்பாவு வியாபாரி ஒருவருக்கு ரசீது வழங்கிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

29 ஆண்டுகளுக்கு பிறகு வள்ளியூர் தினசரி சந்தை நிர்வாகத்தை பேரூராட்சி ஏற்றது

வள்ளியூர் தினசரி சந்தை நிர்வாகத்தை 29 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முதல் பேரூராட்சி ஏற்றுள்ளது.

மாலை மலர்

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சுமார் 222 கடைகளை கொண்ட தினசரி சந்தை 50 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. 

இச்சந்தையில் ராதாபுரம் தாலுகா சுற்று வட்டாரப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் காய்கறிகள், பலசரக்கு பொருட்கள் வாங்குவதற்காக தினசரி வந்து செல்கின்றனர். வாரந் தோறும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுகிறது. 

சந்தையின் வாடகை உரிமை கடந்த 29 வருடங்களாக தனிநபர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது புதிதாக பேரூராட்சியில் தலைவர்கள், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இந்த தினசரி வாரச்சந்தையில் கடைகள் அமைத்து வாடகை வசூலிக்கும் உரிமையை வடக்குவள்ளியூர் பேரூராட்சி நிர்வாகம் ஏற்று நடத்துவதற்கு அனைத்து பேரூராட்சி உறுப்பினர்களும் ஏகமனதாக சம்மதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில் நேற்று முதல் பேரூராட்சி நிர்வாகம் தினசரி சந்தையில் கடைகள் வாடகை வசூலிக்கும் நிர்வாக உரிமையை தொடங்கியது. இதனை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வள்ளியூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராதா துணைத்தலைவர் கண்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:&

கடந்த ஆண்டு கடைகளுக்கு வசூலித்த அதே வாடகையை தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் வசூலிக்கும். 

அதைவிட கூடுதலாக ஒரு ரூபாய் கூட வசூலிக்க மாட்டார்கள். ஆகவே தினசரி சந்தையில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் அச்சப்படத் தேவையில்லை. 

புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி சந்தையில் தற்போது வைத்திருக்கும் அனைத்து வியாபாரிகளுக்கும் கடைகள் நிச்சயமாக வழங்கப்படும். 

மேலும் புதிதாக கட்டப்பட இருக்கும் புதிய பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரி களுக்கு பஸ் நிலைய முகப்பிலேயே தற்காலிக கடைகள் அமைத்து தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.