பாளையில் குருத்தோலை பவனி சென்றவர்களை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

மாலை மலர்

நெல்லை:

இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளையும், உயிர்த்தெழுதலையும் நினைவூட்டும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகிறார்கள்.

இந்த நாட்களில் அவர்கள் விருந்தோம்பலை தவிர்த்து விரதம் இருந்து வருவார்கள். இந்த ஆண்டு 40 நாட்கள் தவக்காலம் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனையுடன் தொடங்கியது.

இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, தவக்கால சிலுவை பயண நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அன்று முதல் கிறிஸ்தவர்கள் அசைவ உணவுகள், ஆடம்பர செலவுகளை தவிர்த்து எளிய வாழ்வு முறையுடன் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தவக்காலத்தின் இறுதிவாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்-படுகிறது. இதன் தொடக்க நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஏந்தி ஞாயிறு பவனி நடைபெற்றது.

பாளையில் பல்வேறு தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடந்தது. பாளை தூய சவேரியார் பேராலயத்தில் நடைபெற்ற பவனிக்கு பேராலய பங்கு தந்தை ராஜேஷ் வரவேற்றார். தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ், கத்தோலிக்க திருச்சபை பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

குழந்தை இயேசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று தேவாலயத்தில் நிறைவடைந்தது. இதேபோல் பாளை தெற்கு பஜார் சவேரியார் ஆலயத்தில் இருந்து தொடங்கிய பவனி மிலிட்டரி லைன் எஸ்.பி. அலுவலகம் வழியாக மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து தச்சநல்லூர் நல்மேய்ப்பர் ஆலயம், பேட்டை அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட நெல்லையில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் ஞாயிறு குருத்தோலை பவனி நடைபெற்றது.

இதில் பேராயர்கள், குருமார்கள், பங்கு தந்தைகள், இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

இதைத்தொடர்ந்து வருகிற 14-ந் தேதி பெரிய வியாழனும், 15-ந் தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியும் கடைபிடிக்கப்படுகிறது.

பெரிய வியாழன் அன்று பாதம் கழுவுதல் நிகழ்ச்சி, புனித வெள்ளி அன்று சிலுவை பாதை ஊர்வலமும் நடக்கிறது. வருகிற 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.