நெல்லை:
நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் தங்களது விதைத் தேவைகளுக்கு விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதைச்சான்று துறையினரால் சான்று செய்யப்பெற்ற விதைகளை வாங்க வேண்டும்.
விதை கொள்கலனில் விவர அட்டை உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். விவர அட்டைகளில் விதையின் காலக்கெடு தேதியை கவனித்து காலக்கெடு முடிவடையாத விதைப்பதற்கு போதிய அவகாசம் உள்ள விதைகளை வாங்க வேண்டும்.
விதைச்சான்று துறையின் கீழ் அறிவிக்கப்பட்ட ரகங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். அவரவர் பகுதிக்கு ஏற்ற ரகமா? முக்கியமாக அந்த பருவத்திற்கு ஏற்ற ரகம் தானா? என கவனித்து வாங்க வேண்டும்.
விதை வாங்கும்போது விற்பனை ரசீது கண்டிப்பாக கேட்டு வாங்க வேண்டும். விற்பனை ரசீதில் பயிர் ரகம், குவியல் எண் மற்றும் காலக்கெடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.
விற்பனை ரசீதில் வாங்குபவர்கள் கண்டிப்பாக கையெழுத்திட்டு வாங்க வேண்டும். விதையின் கொள்கலன் கிழிபடாமல் நன்றாக தைக்கப்பட்டு சீல் இடப்பட்டுள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.
சான்று பெறாத உண்மை நிலை விதைகள் அல்லது விபர அட்டை இல்லாத விதைகளை வாங்கி விதைப்பு செய்தால் முளைப்பு மற்றும் மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
விவசாயிகள் விதை வாங்கும்போது மேற்கூறிய கருத்துக்களை கவனத்தில் கொண்டால் விளைச்சல் பாதிப்பு இன்றி அதிக மகசூல் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.