கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியன் முன்னிலையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்ற போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலரின் சொந்த செலவில் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் அங்கன்வாடி மையத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

3-வது வார்டு கவுன்சிலரின் சொந்த செலவில் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் அங்கன்வாடி மையத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்றது.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை மாநகராட்சி தச்சை மண்டலம் 3-வது வார்டுக்குட்பட்ட மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

ஆனால் இங்கு குடிப்பதற்கும், குழந்தைகள் கழிப்பறை செல்வதற்கும் தண்ணீர் வசதி இல்லாத நிலையில் அங்கன்வாடி பணியாளர்கள் குடங்களில் தண்ணீர் எடுத்துச் செல்லும் நிலை இருந்தது.

இது தொடர்பாக 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரும், தச்சை மண்டல முன்னாள் சேர்மனுமான தச்சை சுப்பிரமணியனிடம் அங்கன்வாடி பணியாளர்கள் புகார் தெரிவித்திருந்தனர். உடனடியாக தச்சை சுப்பிரமணியன் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் தனது சொந்த செலவில் அங்கு ஆழ்துளை கிணறு அமைத்துக் கொடுத்தார். விரைவில் அங்கு மோட்டார் பொருத்தும் பணியை அவர் செய்து கொடுக்க உள்ளதாக கூறினார்.  இந்த பணியின்போது அங்கன்வாடி மைய ஒருங்கிணைப்பாளர், உதவியாளர் மற்றும் நெல்லை பேட்டை பகுதி தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.