ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தையில் விற்பனைக்கு வந்த மாடுகளை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தையில் நேரம் மாற்றம்

ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தையில் வியாபாரிகள் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு இன்று முதல் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் மாடுகள், பசுக்கள், காளைகள் இங்கு விற்-பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

ஈரோட்டிற்கு அடுத்தபடியாக நடைபெறும் மிகப்பெரிய சந்தை என்பதால் பொள்ளாச்சி, காங்கேயம், தேனி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் தங்கள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இதனை வாங்குவதற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகை தருகின்றனர். இதனால் வார சந்தையில் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மதியமே வெளியூர்களில் இருந்த வியாபாரிகள் வந்து விடுவார்கள். மறுநாளான திங்கள்கிழமை வரை காத்திருந்து தங்கள் கால்நடைகளை விற்றுவிட்டு ஊருக்கு திரும்புவது வழக்கம்.

இதனால் சந்தைக்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் 2 நாள் காத்திருக்கும் நிலை ஏற்படும். இதுதவிர சந்தைக்கு நுழைவு கட்டணம் நாள் ஒன்றுக்கு செலுத்த வேண்டியது. 2 நாட்களுக்கு செலுத்த வேண்டிய நிலை இருந்து வந்தது.

எனவே இன்று முதல் கால்நடை சந்தை திங்கள்-கிழமை காலை 6 மணி-யிலிருந்து தொடங்கும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாலையில் காளைகள் விற்கும் வரை வியாபாரிகள் காத்திருந்து விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வியாபாரிகள் நகராட்சி அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இன்று நடந்த சந்தையில் கன்றுக்குட்டிகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும், காளைகள் ஒரு ஜோடி ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையிலும், எருமை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆனது.

அதிக அளவிலான கேரள வியாபாரிகள் இன்று நடந்த சந்தையில் பங்கேற்று கால்-நடைகளை வாங்கி சென்றனர். இதனால் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.