உண்டியலில் கிடந்த தாலி செயின். 
உள்ளூர் செய்திகள்

சாத்தான்குளத்தில் அம்மன்கோவிலில் நகை திருட்டு-போலீசார் விசாரணை

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளம் முத்தாரம்மன் கோவிலில் திருட்டு போன தங்க தாலி செயின், மற்றொரு கோவில் உண்டியலில் கிடந்தது.

மாலை மலர்

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளம் கீழூரில் முத்தாரம்மன் கோவில்  உள்ளது.  இந்த கோவில் தர்மகர்த்தாவாக  அதே  ஊரை  சேர்ந்த நடேசன் (வயது 56)  இருந்து  வருகிறார்.  

கடந்த டிசம்பர்  மாதம்  18-ந்தேதி  முத்தாரம்மன் கோவிலில் கதவை உடைத்து அம்மனின் கழுத்தில் இருந்த தாலி  செயினை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். 

இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தர்மகர்த்தா நடேசன்  அளித்த புகாரின் பேரில்  போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் அதே ஊரில் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட வெள்ளையூரணி சுடலைமாடசுவாமி  கோவிலில் கொடை விழா கடந்த

 21-ந் தேதி நடைபெற்றது. 

விழா முடிந்ததும் மறுநாள் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அப்போது அம்மன் கோவிலில் இருந்து திருட்டு போன அம்மனின் தாலி, தங்க செயின், முக்கால் பாகம் உண்டியலில் இருந்துள்ளது.

இதையடுத்து கோவில் நிர்வாகத்தினர்  சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பார்வையிட்டு நகை திருடியவர் குறித்தும்,   மீதமுள்ள நகை குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.