கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

வல்லநாடு ஆற்றுப்பாலத்தில் விரிசலை சரி செய்ய ரூ.21 கோடியே 42 லட்சம் மதிப்பில் டெண்டர் ஒதுக்கீடு-180 நாட்களில் பணிகளை முடிக்க திட்டம்

வல்லநாடு ஆற்றுப்பாலத்தில் விரிசலை சரி செய்ய ரூ.21 கோடியே 42 லட்சம் மதிப்பில் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடியில் இருந்து நெல்லை வரை நான்கு வழிச் சாலை திட்டம் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நான்கு வழிச்சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

குறிப்பாக தூத்துக்குடியில் உள்ள துறைமுகங்களுக்கு செல்லும் கனரக வாகனங் களும், பெரிய பெரிய கம்பெனிகளுக்குச் செல்லும் வாகனங்களும், விமான நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது.

 இதில் அருகே உள்ள வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் குறுக்கே  பிரம்மாண்ட மான பாலம் ஒன்று கட்டப் பட்டது. இந்த பாலம் முறை யாக கட்டப் படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.

இந்த நிலையில் பாலத்தில் தற்போது வரை 5 முறை விரிசல் ஏற்பட்டு சேதம் அடைத்துள்ளது. இதனால் பாலத்தின் ஒரு வழியாக மட்டுமே போக்குவரத்து நடந்து வருகிறது. பாலத்தை முறையாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் ஆகியோரிடம் இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கிடையில் தூத்துக்குடி எம்பி கனிமொழி மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு வல்லநாடு ஆற்று பாலத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என 2 முறை கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் பாலத்தை சரி செய்வதற்கான டெண்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய ரூ.21 கோடியே 42 லட்சத்து 74 ஆயிரத்து 924 மதிப்பில் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 180 நாட்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் இந்த பாலத்தை முறையாக சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரும் கோரிக்கையாக உள்ளது.