ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி கீழேநவ்வலடிவிளையை சேர்ந்தவர் ராஜலிங்கம் (26). இவர் சாகுபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் சம்பவத்தன்று இரவு பணியில் இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் அங்குள்ள டீசல் கவுண்டர் முன்பு நின்று உள்ளனர்.
அவர்களை பெட்ரோல் கவுண்டர் முன்பு வருமாறு ஊழியர் முத்துராஜ் என்பவர் கூறியுள்ளார். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த 4 பேரும் முத்துராஜின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்க தொடங்கினர்.
இதைப்பார்த்த ராஜலிங்கம் அந்த 4 பேரையும் தடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் தாங்கள் வைத்திருந்த இரும்பு கம்பியால் ராஜலிங்கத்தை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த ராஜலிங்கம் உடனடியாக காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜலிங்கத்தை தாக்கிய 4 பேரை தேடி வருகின்றனர்.